Published : 17 Dec 2022 03:26 PM
Last Updated : 17 Dec 2022 03:26 PM
சென்னை: தமிழகத்தின் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இம்மாதம் 20, 21-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இட மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று (டிச.17) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் & தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (டிச.17) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அந்தமான் கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (டிச.18) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் & தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 19ம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT