Published : 15 Dec 2022 11:10 PM
Last Updated : 15 Dec 2022 11:10 PM
சென்னை: முறையாக கால்வாய்களை இணைத்து, குப்பைகளை அகற்றிய காரணத்தால், கனமழையிலும் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை என்று சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு உறுப்பினர் ஜனகராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தது. இந்த மழையால் தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கவில்லை. ஆனால், வட சென்னை பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரை மேட்டார் கொண்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர்.
இதன்பிறகு, சென்னையில் கடந்த நவம்பர் 15-ம் தேதி கனமழை பெய்தது. இந்த கனமழையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. ஆனால் முகலிவாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்கியது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஆனால், எந்த மாவட்டங்களிலும் அதிக அளவு தண்ணீர் தேங்கவில்லை. குறிப்பாக, சென்னையில் ஒரு இடத்தில் கூட அதிக அளவு தண்ணீர் தேங்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், மழைநீர் வடிகால்களை முறையாக இணைத்ததுதான் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இதில் முதல் மழையின்போது ஒரு சில இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக தண்ணீர் தேங்கியது. இதன்பிறகு போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அனைத்து மழைநீர் வடிகால்களும் இணைக்கப்பட்டன. இதன் பலனாக சென்னையில் எந்த இடங்களிலும் தண்ணீர் தேங்கவில்லை” என்றனர்.
இந்தப் பணிகள் குறித்து சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழுவின் உறுப்பினரும், நீரியல் வல்லுநருமான ஜனகராஜன் கூறுகையில், "பல இடங்களில் மழைநீர் செல்வதற்கான மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் முறையாக இணைக்கப்படாமல் இருந்தன. இதற்கு முன்னூரிமை அளித்து பணிகளை மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் மைக்ரோ வடிகால்களை அடையாறு உள்ளிட்ட கால்வாய்களில் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது, கால்வாய்களில் குப்பைகள் அதிக அளவு சேர்ந்து இருந்தன. இதனால் தண்ணீர் செல்வது தடைபட்டது. இதை தினசரி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, மழைநீர் வடிகால்கள், பெரிய கால்வாய்களுடன் இணையும் இடத்தில் குப்பைகள் சேரமால் தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அத்தியாவசிய சிறிய அளவிலான பணிகளை மேற்கொண்டோம். குறிப்பாக, தண்ணீர் எங்கும் நிற்காமல் நேரடியாக சென்று கால்வாய்களில் சேரும் வகையில் பணிகளை மேற்கொண்டோம்.
மழைக்காலத்தில் தண்ணீரை தேக்கி வைத்தால் நமக்கு வெள்ள பாதிப்பு வராது. மேலும், வறட்சி காலத்தில் நாம் சேமித்த தண்ணீர் நமக்கும் பயன்படும். வெள்ளத்தையும் வறட்சியையும் ஒன்றாக பார்க்க வேண்டும். வெள்ள காலத்தில் எங்கெல்லாம் தண்ணீரை தேக்கி வைத்த முடியுமோ, அங்கெல்லாம் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். அவ்வாறு தேக்கி வைத்தால் மழைக்காலம் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT