Published : 15 Dec 2022 04:07 AM
Last Updated : 15 Dec 2022 04:07 AM
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை அவலாஞ்சி மற்றும் மசினகுடி பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் முதுமலை வெளிமண்டலப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குன்னூர் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் 3 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. குன்னூர் உழவர் சந்தை அருகே மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல உதகை-குன்னூர் சாலையில் எல்லநள்ளி, குன்னூர் டிடிகே சாலை, காந்திபுரம், அம்பிகாபுரம் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
ஆரோக்கியபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்கள் மழை நீரில் இழுத்து செல்லப்பட்டு, சாலையோரத்தில் சாய்ந்து கிடந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு சாலையில் விழுந்த மண்ணை பொக்லைன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.
மழை காரணமாக குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை மதிப்பிடும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையால் உதகை முதல் கல்லாறு வரையில் மலை ரயில் பாதையில் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் பாறைகள் விழுந்துள்ளன.
இதனால் நீலகிரி மலை ரயில் வழித்தடத்தில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ரயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. ரயில் பாதையில் விழுந்துள்ள மண், பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணிகளால் இன்றும் (டிச.15), நாளையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிவாரணம் வழங்கல்: குன்னூர் அடுத்த லூர்துபுரம் பகுதியில் தொடர் மழை காரணமாக 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் உட்பட பல்வேறு காய்கறிகள் சேதமடைந்தன. பாசனக் குழாய்களும் சேதமடைந்துள்ளன. குன்னூர் தாலுகாவில் சேதமடைந்த 24 வீட்டின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.4,100 நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவின் பேரில் குன்னூர் கோட்டாட்சியர் பூஷ்ணகுமார், குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் 3 வருவாய் ஆய்வாளர்கள், 15 கிராம நிர்வாக அதிகாரிகள் தலைமையில் வருவாய் துறையினரும், குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் 25 பேரும், நெடுஞ்சாலைத் துறையினரும், நகராட்சி நிர்வாகத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி: உதகையில் பனிமூட்டத்துடன், தொடர் சாரல் மழை பெய்து வருவதால் ரம்மியமான காலநிலை நிலவுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்தனர். சாரல் மழை பெய்தபோதும் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், டால்பினோஸ், லேம்ஸ்ராக் உட்பட பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். படகு இல்லத்தில் மிதி படகு சவாரி செய்து அவர்கள் மகிழ்ந்தனர்.
மழையளவு: மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குன்னூரில் 303 மி.மீ. மழை பதிவானது. உலிக்கல் 102, கோடநாடு 95, பர்லியாறு 90, கேத்தி 67, கோத்தகிரி 58, கிண்ணக்கொரை 50, உதகை 47, குந்தா 36, கெத்தை 35, கீழ் கோத்தகிரி 30, தேவாலா 22, கூடலூர் 19, பந்தலூர் 18, அவலாஞ்சி 17, எமரால்டு 15, செருமுள்ளி 14, அப்பர் பவானி 13, மசினகுடி 12, கிளன்மார்கன் 10, பாடந்தொரை 10, ஓவேலி 9, சேரங்கோடு 7, கல்லட்டி 6, நடுவட்டம் 4 மி.மீ. மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT