Published : 11 Dec 2022 11:21 AM
Last Updated : 11 Dec 2022 11:21 AM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மேன்டூஸ்’ புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் மொத்தம் 23 வீடுகள் சேதம், 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. நெல், வாழை உட்பட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
வங்கக்கடலில் உருவான ‘மேன்டூஸ்’ புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் முதல் இன்று வரை 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, பனப்பாக்கம், சோளிங்கர், கலவை உட்பட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழையால் 1 குடிசைவீடு முழுவதுமாகவும், 14 குடிசை வீடுகள், 8 ஓட்டு வீடுகள் ஆகியவை பகுதியாகவும் மொத்தம் 23 வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஓச்சேரி- அரக்கோணம் சாலையில் 5 மரங்கள், மேல்வீராணம், தப்பூர், உத்திரம்பட்டு உட்பட பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துவிழுந்தன. அவைகளை, தீயணைப்புத் துறையினர் மற்றும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை பணியாளர்கள் அகற்றி சீரமைத்தனர். ஆற்காடு தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ் சாலையில் விழுந்த மரத்தை ஆற்காடு நகர காவல் துறையினரால் உடனடியாக அகற்றப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள மொத்தம் 369 ஏரிகளில் 178 ஏரிகள் முழுவதும் நிரம்பின. மகேந்திரவாடி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல், தொடர் மழையால் குறைவாக தண்ணீர் உள்ள ஏரிகளுக்கு, கால்வாய் வழியாக தண்ணீர் திருப்பிட விடப்பட்டு வருகிறது.
3,934.18 ஏக்கர் பயிர்கள் சேதம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேன்டூஸ் புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் நேற்றும் பரவலாக கனமழை பெய்தது. தொடர் மழையால் விவசாயிகளின் விளை நிலங்களில் மழைநீர் மற்றும் வெள்ளம் சூழ்ந்து பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதன்படி, அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு ஆகிய வட்டாரங்களில் பல்வேறு இடங்களில் பயிர் சேதமடைந்துள்ளது. இதில், அதிகபட்சமாக மாவட்டத்தில் 3 ஆயிரத்து 550.90 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல, உளுந்து 111.19 ஏக்கரும், நிலக்கடலை 271.56 ஏக்கரும், சோளம் 0.4942 ஏக்கர் என மொத்தம் 3 ஆயிரத்து 934.90 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதனால், 1,988 விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT