Published : 09 Dec 2022 06:57 PM
Last Updated : 09 Dec 2022 06:57 PM
புதுச்சேரி: புயல் அச்சத்தால் பைபர் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்த வழியில்லாததால் தங்கள் வீடுகளுக்கு அருகே டிராக்டரில் எடுத்து சென்று தெருக்களிலும், தென்னந்தோப்புகளிலும் புதுச்சேரி மீனவர்கள் பத்திரப்படுத்தியுள்ளனர். இதனால் தெருவெங்கும் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் கனமழை பொழியும் என எச்சரிக்கை விடப்பட்டு 5 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்துள்ள சூழலில் மிதமான மழை பொழிவு உள்ளது.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி துறைமுக பகுதியில் ஏராளமான விசைப் படகுகள் பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பைபர், கட்டுமரங்களை நிறுத்த இங்கு வசதியில்லை. அதனால், அந்தந்த மீனவ கிராமங்களிலேயே பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைத்துக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வழக்கமாக 3 அடி அளவிற்கு அலைகள் வீசும் தற்போது அதன் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. விசைப்படகுகள் போல் பைபர், கட்டுமரங்களை நிறுத்த வசதியில்லை.
மீனவ கிராமமான நல்லவாடு கிராம மீனவர்கள் தங்கள் படகுகளை காக்க புது முயற்சியை எடுத்துள்ளனர். கடலில் இருந்து டிராக்டர் மூலம் படகுகளை இழுத்து ஏற்றி தாங்கள் வசிக்கும் தெருக்களிலும், வீடுகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும், தென்னந்தோப்புகளிலும் நிறுத்தி கயிறு மூலம் கட்டி வைத்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர்களிடம் கேட்டதற்கு, "வழக்கமாக படகுகளை நிறுத்தும் இடத்தில் தண்ணீர் அதிகளவில் உள்ளது. பேரிடர் காலத்தில் படகுகளை பாதுகாக்க அரசு எவ்வித உதவியும் செய்வதில்லை. பன்னித்திட்டு மீன்பிடி துறைமுகத்தை கட்டினாலாவது எங்களுக்கு பயன் தரும். எங்கள் படகை நாங்கள்தான் பாதுகாக்க வேண்டும். அதை பாதுகாப்புடன் எங்கள் தெருக்களிலோ, வீடுகளை ஒட்டியுள்ள பகுதிகளிலோ கொண்டு வைத்து பத்திரப்படுத்துகிறோம். இதுவரை எங்களிடம் குறை கேட்க கூட யாரும் வரவில்லை" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT