Published : 09 Dec 2022 04:15 PM
Last Updated : 09 Dec 2022 04:15 PM

பாதுகாப்பு, மீட்பு பணியில் 16,000 போலீசார்: மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் சென்னை காவல் துறை

தயார் நிலையை ஆய்வு செய்த காவல் ஆணையர்

சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 12 மாவட்ட பேரிடர் மீட்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள சென்னை பெருநகர காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளது. இதன்படி பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சென்னை பெருநகர காவல் சார்பில் 12 மாவட்ட பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இக்குழுவினரிடம் தயார் நிலையில் உள்ளன.

மேலும், படகுகளில் சென்று மீட்புப் பணிகள் மேற்கொள்ள 5 காவலர்கள் கொண்ட ஒரு குழு என 4 குழுக்கள் அமைக்கப்பட்டு படகு, கயிறு, உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் 40 நபர்கள் அடங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவும் பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. இதன்படி, இந்தப் பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு செய்தார். இதைத் தவிர, காவல் துறை சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகளின் விவரம்:

  • சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் சிறப்புப் பிரிவு காவல் ஆளிநர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் 16,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • காவல் அதிகாரிகளின் குழுக்களில் ஒருங்கிணைந்து பணியாற்ற 1,500 ஊர்க்காவல் படையினர் (Home Guard) வரவழைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு புயல், மழை வெள்ளம் குறித்து எச்சரிக்கைகள், அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
  • பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், விளம்பர பலகைகள் மற்றும் சூறைக்காற்றினால் பறக்கக் கூடிய பிளாஸ்டிக், இரும்பு தகடு, கட்டுமான பணியில் உள்ள கண்ணாடி மற்றும் தடுப்புகள் உள்ளிட்ட இலகு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு ரோந்து வாகன குழுவினர் மூலம் அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
  • கடற்கரை பகுதிகளில் மாண்டஸ் புயலின் காரணமாக அலைகள் வேகம் அதிகப்படியாகவும் ஆபத்தான முறையில் இருப்பதினால் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  • தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
  • மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சியினருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற காவல் குழுவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளிள் பெரிய பள்ளங்கள், கால்வாய்கள், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் குழுவினர் மூலம் இரும்பு தடுப்புகள் (Barricade) அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • மாண்டஸ் புயல் காரணமாக இரும்பு தடுப்புகள் கீழே விழுந்துவிடாத வண்ணம், பறக்காத வண்ணமும், கயிற்றால் கட்டி பலப்படுத்தப்பட்டுள்ளது.
  • 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து ரோந்து காவல் வாகனங்கள், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்து, இரும்பு தடுப்புகள் (Barricades) கயிற்றால் கட்டப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • அனைத்து ரோந்து காவல் வாகனங்களிலும், இரும்பு கம்பி, கட்டிங் பிளேயர், டார்ச் லைட் போன்ற அவசர உதவி பொருட்கள் வைத்து மீட்பு பணிகள் மேற்கொள்ள தயார்படுத்தப்பட்டுள்ளது.
  • காவல் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் உடனுக்குடன் தகவல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, காவல் குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • போக்குவரத்து சுற்றுக் காவல் ரோந்து வாகனம் மூலம் சுரங்கப்பாதை, மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு அவ்வப்போது ரோந்து சென்று கண்காணித்து, மழைநீர் அகற்ற மாநகராட்சி குழுவினருடன் சேர்ந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மழைநீர் தேங்கி போக்குவரத்து இடையூறு உள்ள பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைத்தும், மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • சென்னை பெருநகர காவல்துறையில், சிறப்பு கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு, 044-23452372 என்ற சிறப்பு உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்கட்டுப்பாட்டறை மூலம் புயல் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் பரிமாற்றப்பட்டு, மீட்பு மற்றும் இடர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • புயல் காரணமாக அவசர உதவி மற்றும் இடர் ஏற்பட்டால், காவல்துறை அவசர உதவி எண்.100 (அ) 112, சென்னை பெருநகர மாநகராட்சி உதவி எண்.1913, தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவசர உதவி எண்.101 (அ) 112 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
  • புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகார அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x