Published : 09 Dec 2022 03:59 AM
Last Updated : 09 Dec 2022 03:59 AM
சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் ‘மேன்டூஸ்' புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகில் இன்று (டிச. 9) நள்ளிரவு கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7-ம் தேதி இரவு ‘மேன்டூஸ்’ புயலாக வலுப்பெற்றது. இது 8-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இந்தப் புயல் மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகில் 9-ம் தேதி (இன்று) நள்ளிரவில் கரையைக் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக 9, 10, 11-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 12-ம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9-ம் தேதி (இன்று) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10-ம் தேதி திருவள்ளூர், சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரில் சிலபகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மணிக்கு 50 முதல் 70 கி.மீ.வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டி தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், வட இலங்கை கடலோரப் பகுதிகளில் 9-ம் தேதி (இன்று) காலை முதல் மாலை வரை மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்திலும், மாலை முதல் 10-ம் தேதி காலை வரைமணிக்கு 65 முதல் 85 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்றும் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து 10-ம் தேதி இரவு மணிக்கு 30 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா பகுதிகளில் 9-ம்தேதி மாலை முதல் 10-ம் தேதி காலை வரை மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து, மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மொத்தத்தில் வரும் 10-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
தீவிர புயலாகும் ‘மேன்டூஸ்': இந்நிலையில், டெல்லியில் உள்ள வெப்ப மண்டல புயல் தொடர்பான சிறப்பு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வங்கக் கடலில் நிலவிவரும் ‘மேன்டூஸ்' புயல் நேற்று மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மணிக்கு 13 கிமீ வேகத்தில் மாமல்லபுரம் நோக்கி நகர்ந்து வருகிறது.
தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. வியாழன் மாலை தீவிர புயலாக வலுப்பெற்று, வெள்ளி காலை மீண்டும் புயலாக வலுகுறையும். பின்னர், புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே, மாமல்லபுரம் அருகே 9-ம் தேதி இரவு கரையை கடக்கக்கூடும். அப்போது, அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகம், மெரினா, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை போன்ற பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT