Published : 08 Dec 2022 04:57 AM
Last Updated : 08 Dec 2022 04:57 AM
சென்னை: புயல், மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாவட்டபோலீஸாருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னையில் மீட்புப் பணியில் ஈடுபட தமிழக காவல் துறையைச் சேர்ந்த தேசிய நீச்சல் வீரர்கள் மற்றும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் 50 பேர் கொண்ட குழுவினர் ஆகியோர், மீட்புப் பணிக்கான தளவாடங்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும், படகுகளுடன் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். அதேபோல, புயல், மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவவும், மீட்புப் பணியில் ஈடுபடவும் காவல் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT