Published : 30 Nov 2022 04:03 AM
Last Updated : 30 Nov 2022 04:03 AM

கோவை வழியாக இயக்கப்படும் 6 எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

பிரதிநிதித்துவப் படம்

கோவை: சேலம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக, வரும் 3ம் தேதி கோவை வழியாக இயக்கப்படும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பர் 3-ம் தேதி இரவு 8.10 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12601), ஈரோட்டில் இருந்து வரும் 4-ம் தேதி மங்களூரு புறப்பட்டுச் செல்லும். கோவையில் இருந்து வரும் 3-ம் தேதி லோக்மான்ய திலக் புறப்பட்டுச் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:11014), கோவைக்கு பதில் கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

மங்களூருவிலிருந்து வரும் 2-ம் தேதி சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22638), மங்களூருவில் இருந்து ஈரோடு ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். லோக்மான்ய திலக்கில் இருந்து நாளை (1-ம் தேதி) கோவை புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:11013), கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 3-ம் தேதி அதிகாலை 4.25 மணிக்கு மும்பை சிஎஸ்எம்டி ரயில்நிலையம் புறப்பட்டுச் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16332), 2 மணி நேரம் தாமதமாக காலை 6.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். ஆலப்புழாவில் இருந்து வரும் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தன்பாத் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 13352), 3 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x