Published : 29 Nov 2022 04:00 AM
Last Updated : 29 Nov 2022 04:00 AM
கோவை: சேலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கோவை வழியாக இயக்கப்படும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 3ம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் டிசம்பர் 3-ம் தேதி கோவையிலிருந்து காலை 6.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12680), சென்னையிலிருந்து மதியம் 2.30 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12679) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12675), கோவையில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12676), சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12243), கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12244) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரு புறப்பட்டுச் செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22666), கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22665), கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து காலை 6.10 மணிக்கு எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12677), எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரு புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12678) ஆகியவை வரும் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப் படுகிறது.
கோவை - சேலம் மெமு ரயில் ரத்து: மேலும், வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை கோவையிலிருந்து காலை 9.05 மணிக்கு சேலம் புறப்பட்டுச் செல்லும் மெமு ரயில் (எண்:06802), சேலத்திலிருந்து மதியம் 1.40 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் மெமு ரயில் (எண்:06803) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT