Published : 28 Nov 2022 12:56 PM
Last Updated : 28 Nov 2022 12:56 PM
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேயை கண்டித்து, திருவாரூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை நன்னிலம் ரயில் நிலையத்தில் மறித்து திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்டங்களை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேவை கண்டித்தும், கரோனா காலத்துக்கு முன்னால் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தியும், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும், மன்னார்குடியில் இருந்து கோவை செல்கின்ற செம்மொழி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் திருவாரூர் வரை நீட்டித்து, அங்கு இன்ஜின் மாற்றி எடுத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை நன்னிலம் ரயில் நிலையத்தில் மறித்து திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மன்னார்குடி, மயிலாடுதுறை இடையிலான பயணிகள் ரயிலை நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி என்ற இடத்தில் மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ரயில் முன்பாக நடந்தே வந்தனர். பயணிகள் ரயிலும் மறியல் செய்தவர்கள் பின்னால் மெதுவாக இயக்கப்பட்டது. பின்னர் அந்த ரயிலை மறிக்காமல் போராட்டக்காரர்கள் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கொரடாச்சேரி அருகே கிளரியம் என்ற இடத்தில், திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, நாகை தொகுதி எம்பி எம்.செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வை. செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எஸ் எம் பி துரைவேலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன் உட்பட அரசியல் கட்சியினரும் ரயில் தண்டவாளத்தில் மறியல் செய்து போராட்டம் நடத்தினர்.
எர்ணாகுளம் விரைவு ரயிலை மறியல் செய்ய திட்டமிட்டு காத்திருந்தனர். இதனை அறிந்த ரயில்வே நிர்வாகம் தஞ்சாவூரிலேயே எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி, பயணிகளிடம் வசூலித்திருந்த டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்கியது. இதனால் திருவாரூர் நோக்கி ரயில்கள் வராத சூழல் ஏற்பட்டது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நாகை எம்.பி. செல்வராஜ் கூறியதாவது: "எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நாகப்பட்டினம் நோக்கி வந்தடையாதபடி தஞ்சையிலேயே பயணிகளிடம் கட்டணம் திருப்பி செலுத்தி விட்டனர். மேலும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை கொரடாச்சேரி வரை கொண்டு வந்து நிறுத்த பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதி தற்காலிகமாக இந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது" எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட வந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே, மன்னார்குடியில் வர்த்தக சங்கத்தினர் சார்பில் மன்னார்குடி தேரடியில் இருந்து பேரணியாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் செம்மொழி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் எந்த ஒரு வழித்தட மாற்றமும் இன்றி இயக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT