Published : 28 Nov 2022 07:57 AM
Last Updated : 28 Nov 2022 07:57 AM
சென்னை: மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதிலும் உள்ள 13,210 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ என்ற அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் காட்டூரில் இன்று தொடங்கிவைக்கிறார்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த, பள்ளிகளில் முதல்முறையாக ‘வானவில் மன்றம்’ அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் சிறந்த நிபுணர்களை கொண்டு அறிவியலில் செயல்முறை வடிவில் பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்து மாணவர்களின் கற்றல் மேம்படுத்தப்படும்.
அதன்படி, அறிவியல், கணிதப் பரிசோதனைகளை செய்வதற்கு குறைந்த விலையில் பொருட்களை வாங்க, ஒரு பள்ளிக்கு முதல்கட்டமாக ரூ.1,200 ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பாடத்துடன் தொடர்புடைய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில் வாங்கி, பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்து, மாணவர்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். மன்றத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும். இதை செயல்படுத்துவதற்கான காணொலிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
வானவில் மன்றத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிட நலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவ.28-ம் தேதி (இன்று) தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, இன்று மதியத்துக்குள் மாநிலம் முழுவதிலும் உள்ள 13,210 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் வானவில் மன்றம் தொடங்கப்பட வேண்டும். இதன் தொடக்கமாக ஆசிரியர்கள், மாணவர்கள் ஓரிரு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ.1.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பாடத்துடன் தொடர்புடைய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை வாங்கி, சோதனைகளை செய்து காண்பித்து, மாணவர் கேள்வி கேட்பதை ஊக்குவிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT