Published : 08 Jul 2014 07:51 PM
Last Updated : 08 Jul 2014 07:51 PM
ரயில்வே துறையின் நிதிநிலை மையை மேம்படுத்தும் துணிச் சலான பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாக ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் ஜெய லலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்தியில் கடந்த 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான நிர்வாகத்தால் ரயில்வே துறையின் நிதிநிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த கடும் நெருக்கடியை தெரிந்துகொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் ரயில்வே பட்ஜெட்டில் புதிய திட்டங்களை வரையறுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
வைர நாற்கர அதிவேக ரயில் போக்குவரத்து இணைப்புத் திட்டம், போக்குவரத்து உள்கட்டமைப்பில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். அது நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும். அதேபோல், அதிவேக புல்லட் ரயில்கள் திட்டம் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் திட்டம் ஆகும். இந்த புதிய திட்டத்தை சென்னையிலும் கொண்டுவர வேண்டும்.
பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை
சரக்கு போக்குவரத்தை படிப்படியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பது மிகவும் பொருத்தமானது. நிலக்கரி போக்குவரத்து மேம்பாடு, தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி கிடைப்பதை எளிதாக்கும்.
ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் தூய்மை, பாதுகாப்பு, உணவு, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த போதிய முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. அதேபோல், பாதுகாப் பான ரயில் பயணத்துக்கும் உயர் முன்னுரிமை அளித்துள்ளனர்.
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ரயில் கட்டணத்தை மாற்றியமைக்கும் முந்தைய அரசின் கொள்கையை பின்பற்றக் கூடாது. ரயில் கட்டணத்தை மேலும் உயர்த்தி சாதாரண மக்களின் சுமையை அதிகரிக்கக் கூடாது என்று பிரதமருக்கும், ரயில்வே அமைச்சருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஆளில்லா லெவல் கிராசிங்குகளை விரைவாக மாற்றுவது, ரயில்வே திட்டங்களை கண்காணிக்கும் பணியில் மாநில அரசுகளை ஈடுபடுத்துவது உள்பட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற உத்தேசித்திருப்பதை வரவேற்கிறேன்.
நீண்டகாலமாக நிலுவையில் கிடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டால், தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட்டு அதனால் மக்கள் பயன்பெறுவர். சென்னையில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் மேல்மருவத்தூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும் புதிய ரயில்கள் இயக்கும் திட்டத்தையும் வரவேற்கிறேன்.
துணிச்சலான முடிவுகள்
எவ்வித ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக ரயில்வேயின் உண்மை நிலவரத்தை நாட்டு மக்களுக்கு தெரிவித்ததற்காக பிரதமருக்கும், ரயில்வே அமைச்சருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். அவர்களின் அணுகுமுறை, பொருளாதார ரீதியில் பொறுப்புமிக்கது, மிகவும் துணிச்சலானது. ரயில்வேயின் நிதி நிலைமையை மேம்படுத்தக்கூடிய புதிய முயற்சிகளும் புதிய திட்டங்களும் புதிய செயல்பாட்டு முறைகளும் நிச்சயம் பலன் தந்து நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT