Published : 20 Nov 2022 03:14 PM
Last Updated : 20 Nov 2022 03:14 PM
சென்னை: "மழைநீர் வடிகால் பணிகளை முழுவதுமாக முடிக்கவில்லை. 80 முதல் 95 சதவீதம் வரைதான் முடித்துள்ளோம். அதையே மக்கள் பாராட்டுகின்றனர். இன்னும் மிச்சம் சில பணிகள் உள்ளன. அதையும் வரக்கூடிய காலக்கட்டத்தில் செய்து முடிப்போம் என்று உறுதியளிக்கிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் 56 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று சொல்வார்கள். நாட்டில் எப்படி மழை பெய்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எப்போது ஆட்சிக்கு வந்தோமோ அப்போதிலிருந்து விடாமல் பெய்து கொண்டிருக்கிறது,ஆட்சிக்கு வந்தவுடன் கரோனா, அந்த கொடிய நோயிலிருந்து சிறிது மீண்டு வந்தோம். வந்தவுடன், பார்த்தீர்களென்றால் மழைதான். பத்துநாள் கூட இடைவெளி இல்லை, பெய்து கொண்டேதான் இருந்தது.
வேடிக்கையாக ஒரு செய்தி சொல்கிறேன், உண்மை செய்தி சொல்கிறேன். என்னவென்றால், 1996 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, நான் மேயராக பொறுப்பிற்கு வந்தேன். முதன்முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக நான்தான் பொறுப்பிற்கு வந்தேன். உங்களுக்கெல்லாம் தெரியும், சென்னை மாநகர மேயராக வந்தபோது, வந்தவுடன் அடுத்த நிமிடமே மழை ஆரம்பித்தது, இருபது நாட்கள் தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது, எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் நாங்கள் பார்த்து சீர்படுத்திக் கொண்டிருந்தோம்.
அப்போது முதலமைச்சர் கலைஞர் , நானும் பார்வையிட வேண்டும், மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும், நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று சொன்னார். உடனே மாநகராட்சி வாகனத்தில் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்துக்கொண்டு, சென்னை முழுவதும் சுற்றிப் பார்த்தோம். காரில் போய்க் கொண்டிருக்கும்போது வேடிக்கையாக சொன்னார், ஸ்டாலின் சென்னைக்கு மேயராக வந்தால், மழை பேயராக இருக்கிறது என்று சொன்னார்.
அதுபோல, இப்போது குடிநீர் பிரச்சனையே இல்லை. அந்த அளவுக்கு மழையும் பெய்து கொண்டிருக்கிறது. அந்த மழையை எப்படி சமாளித்துக் கொண்டிருக்கிறோம்? ஏற்கனவே கடந்த ஆண்டு மழை பெய்தபோது என்ன நிலை? அதுவும் உங்களுக்குத் தெரியும். இப்போது என்ன நிலை? நாங்கள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. 80 முதல் 95 சதவீதம் தான் முடித்திருக்கிறோம், அதற்கே மக்களிடமிருந்து பாராட்டு வருகிறது. இன்னும் பணிகள் இருக்கிறது. அதையும் வரக்கூடிய காலகட்டத்தில் செய்து முடிப்போம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் நான் எடுத்துச் சொல்லி, நாட்டில் இப்போது எப்படிப்பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்யக்கூடிய ஆட்சிதான், உங்கள் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.
மக்களுக்கு சேவை செய்வதன் மூலமாக உடல் நலிவு ஏற்பட்டாலும். அதைப்பற்றி கவலைப்படாமல் நான் இன்றைக்கு என்னுடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்று அண்ணா சொன்னார். நான் இப்போது சொல்கிறேன், ஏழையின் சிரிப்பிலே கலைஞரைக் காண்போம், அண்ணாவையும் காண்போம் என்ற நிலையில் நம்முடைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் துணை நிற்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும்" என்று பேசினார்.
இந்த விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT