Published : 19 Nov 2022 06:00 AM
Last Updated : 19 Nov 2022 06:00 AM
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழையளவு 160 மி.மீ அளவுக்கு குறைந்ததால் பாலாற்றில் வீணாகச் செல்லும் வெள்ள நீரை விரைவாக ஏரிகளுக்கு திருப்பவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாலாற்றில் வறட்சியே இல்லாமல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் மழை இல்லாவிட்டாலும், பாலாற்றுக்கு நீர்வரத்தாக இருக்கும் ஆந்திர மாநில வனப்பகுதிகள், கவுன்டன்யா, மலட்டாறு, அகரம் ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தொடர்ந்து பாலாற்றுக்கு நீர்வரத்து உள்ளது. வேலூர் மாவட்டத்தில் சராசரி மழையளவு ஏறக்குறைய 990 மி.மீ என்ற அளவாக உள்ளது. கடந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக பெய்த நிலையில் நடப்பாண்டில் அதே அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்தை விட குறைவாக மழை பதிவாகியுள்ளது.
160 மி.மீ மழை குறைவு: வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. இதில், 13 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மாவட்டத்தை பொறுத்தவரை இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் மழை பெய்யுமா? என்பதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையால் 389.8 மி.மீட்டர் மழை கிடைக்க வேண்டும். ஆனால், இப்போது வரை 183 மி.மீ மட்டுமே பதிவாகியுள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில் குளிர்காலமான ஜனவரி முதல் பிப்ரவரி வரை சராசரியாக பெய்ய வேண்டிய 13.1மி.மீ மழையில் 45.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கோடை காலமான மார்ச் முதல் மே மாதம் வரை சராசரி மழையளவான 103.4 மி.மீட்டருக்கு பதிலாக 143.1 மி.மீ பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவாக வேண்டிய 479.9 மி.மீ சராசரி மழையில் 450 மி.மீ மட்டுமே பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையும் பெரியளவில் இல்லை என்பதால் நடப்பாண்டில் மொத்தம் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 986.2மி.மீட்டரில் 820 மி.மீ மட்டுமே பெய்துள்ளது.
ஏரிகளுக்கு தண்ணீர்: பாலாற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் வெள்ள நீரை ஆற்றை நம்பியுள்ள ஏரிகளில் நீர்வரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் சங்கம் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் உதயகுமார் கூறும்போது, ‘‘குடியாத்தம் பெரிய ஏரி, செஞ்சி கிருஷ்ணாபுரம் ஏரி மற்றும் பாலாறு படுகையில் இருக்கும் ஏரிகளில் எதிர்வரும் கோடை காலத்தை கணக்கில் கொண்டு நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை விரைந்து தொடங்க வேண்டும்’’ என்றார்.
இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித் தபோது, ‘‘வேலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை 20 ஏரிகள் மட்டுமே பாலாற்று நீரை கொண்டு நிரப்ப முடியும். மற்ற ஏரிகளில் மழை பெய்தால் மட்டுமே நிரப்ப முடியும். இன்றைய நிலவரப்படி இறைவன்காடு ஏரி முழுமையாக நிரம்பியதால் விரிஞ்சிபுரம், ஒக்கணாபுரம் ஏரிக்கு ஒரே அளவு நீரை திருப்பியுள்ளோம். செதுவாலை ஏரி 90 சதவீதம் நிரம்பியுள்ளது. அதிலிருந்த 2 ஊராட்சி ஏரிகளுக்கு தண்ணீரை நிரப்ப முடியும்.
மேல்மொணவூர், சதுப்பேரி என அடுத்தடுத்து ஏரிகள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் இன்னும் 3 மாதங்களுக்கு வெள்ளம் செல்லும் என்பதால் அடுத்த 10 நாட்களுக்குள் முக்கிய ஏரிகளை நிரப்ப முடியும். பாலாற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரித்தால் மட்டுமே ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பும் பணி பாதிக்கிறது. தண்ணீரை திருப்பும் இடத்தில் இருக்கும் கரைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT