Published : 16 Nov 2022 04:57 PM
Last Updated : 16 Nov 2022 04:57 PM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீர்காழியில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்தது. சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் 14-ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிச் சென்றார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இன்று சீர்காழி பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சீர்காழி அருகே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். ஆச்சாள்புரம் கொடிவேலி மேட்டுத்தெரு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டு மக்களிடம் கோரிக்கைகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க ஆவண செய்வதாக மக்களிடம் உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT