Published : 16 Nov 2022 10:32 AM
Last Updated : 16 Nov 2022 10:32 AM
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (16-ம்தேதி) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்துகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வலுப்பெறக்கூடும். இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், அதைஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT