Published : 15 Nov 2022 06:35 AM
Last Updated : 15 Nov 2022 06:35 AM
காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு தொடர்கிறது.குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பல இடங்களில் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மாங்காடு பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக ஓம்சக்தி நகர், சாதிக் நகர், செல்வகணபதி நகர் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் அதிக அளவு தேங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியில்லாததால் தொடர்ந்து மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் சென்று வருவதற்கு குழந்தைகள், பெரியோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், முறையான மழைநீர் வடிகால்களை அமைக்க வேண்டும் என பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்காலிக ஏற்பாடாக ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி மாங்காடு பகுதிகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதேபோல் செல்வகணபதி நகர், சாதிக் நகர், ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ராட்சத மோட்டார்கள் மூலம் வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நிரந்தர தீர்வு காணும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என்றும் இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இந்தப் பகுதியில் மழைநீர் தேங்குவதால் ஆண்டுதோறும் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாவதாகவும், கொசு அதிகம் உற்பத்தியாகி பெரும் இன்னல் அடைவதாகவும் கூறுகின்றனர்.
போக்குவரத்து துண்டிப்பு
இதேபோல் மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீரால், கல்லாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நீலமங்கலம் கிராமத்தின் தரைப்பாலம் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.
மதுராந்தகம் ஏரியில் ரூ.120 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஏரியின் மதகுகள் மற்றும் கலங்கல்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் முழுவதும் வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மழையால் கிளியாற்றின் மூலம் நீர்வரத்து ஏற்பட்டால் ஏரியில் தேங்காமல் கல்லாற்றில் வெளியேறும் வகையில், பொதுப்பணித்துறை பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் கிளியாற்றில் இருந்து கல்லாற்றுக்கு விநாடிக்கு 610 கனஅடி தண்ணீர் வெளியேறி பல்லவன் ஏரிக்குச் செல்கிறது.
இதனால், மதுராந்தகம் அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் முழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நீலமங்கலம், தச்சூர், கீழ்ப்பட்டு, நெல்வாய், கல்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அச்சிறுபாக்கம் வெள்ளப்புத்தூர் அருகே உள்ள தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் முழ்கியுள்ளதால், அச்சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டியாம்பந்தல், வெள்ளப்புத்தூர், வளையபுத்தூர், கருக்கிலி அதன் சுற்றுப்புற கிராம மக்கள், மதுராந்தகம் பகுதிக்குச் செல்வதற்காக சுமார் 10 கி.மீ. சுற்றி நெல்வாய் வழியாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரணி ஆற்றில் வெள்ளம்
திருவள்ளூர் மாவட்டத்தில், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால், ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பெரியபாளையம் அருகே ஆரணி அடுத்த அஞ்சாத்தம்மன் கோயில் மற்றும் புதுப்பாளையம் இடையே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரணி போலீஸார், நேற்று தரைப்பாலத்தின் இரு புறமும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர்.
இதனால், புதுப்பாளையம், மங்களம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக சுமார் 15 கி.மீ. தூரத்துக்கு மாற்றுப் பாதையில் பெரியபாளையம் சென்று அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ரூ.20 கோடி மதிப்பில் அஞ்சாத்தம்மன் கோயில் புதுப்பாளையம் இடையே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, வடகிழக்கு பருவ மழைக்குப் பிறகு, உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மீட்பு படை கண்காணிப்பு
திருவள்ளூர் அருகே சேதமடைந்த தரைப்பாலம் அருகே தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 31 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர், கடந்த 12-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு வந்தனர்.அவர்கள், மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூர் அருகே சத்தரை மற்றும் கொண்டஞ்சேரி இடையே கூவம் ஆற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள தரைப்பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
விபத்தை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள தரைப்பாலத்தின் அருகே தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 10 பேர், போலீஸாருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மீட்பு கருவிகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் அள்ளும் கருவிகள், கயிறுகள், முதல் உதவி பெட்டி கள், டார்ச் லைட்டுகள், மண்வெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
செய்யாற்றில் வெள்ளம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாகரல் பகுதியில் செய்யாற்றின் குறுக்கே கனரக வாகனங்கள் செல்ல போலீஸார் தடை விதித்துள்ளனர். இங்கு மேம்பாலம் கட்டுமானப் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மணல் கொட்டி தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் பலவீனம் அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த பகுதியில் கனரக வாகனங்களை இயக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
மதுராந்தகம் ஏரி மதகுகள், கலங்கல்கள் உடைக்கப்பட்டு ரூ.120 கோடியில் தூர்வாரும் பணிகள் நடக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT