Published : 15 Nov 2022 04:40 AM
Last Updated : 15 Nov 2022 04:40 AM

குமரியில் விடிய விடிய கொட்டிய மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய கனமழையால் கடும் குளிர் நிலவியது. பகலை இரவாக்கும் வகையில் நேற்று நிலவிய தட்பவெப்பத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் வெள்ள அபாய எச்சரிக்கையில் உள்ளன. எந்நேரமும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அணைகளின் முழு கொள்ளளவை விட 5 அடி குறைவாக நீர்மட்டத்தை நிலை நிறுத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பொதுப்பணித்துறை நீர்ஆதார துறையினர் அணைப் பகுதியை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று முன்தினத்தில் இருந்து விடிய விடிய கொட்டிய மழை நேற்று பகல் முழுவதும் நீடித்தது. பகலில் மிதமான மழை பெய்தாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் ஊழியர்கள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வழக்கமான பணியை மேற்கொள்ள சிரமம் அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 55 மிமீ மழை பதிவானது.

இரணியலில் 42 மிமீ, குருந்தன்கோட்டில் 36, முள்ளங்கினாவிளையில் 32, குழித்துறையில் 21, களியலில் 18, தக்கலையில் 16, குளச்சலில் 18.4, திற்பரப்பில் 16, அடையாமடையில் 18 மிமீ., மழை பெய்திருந்தது. கடந்த இரு நாட்கள் பெய்த மழை குமரி அணை பகுதிகளில் மிகவும் குறைவாகவே இருந்தது. அதே நேரம் நகர, கிராம பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிக அளவில் இல்லை. குறைவான நீர்வரத்து உள்ளதால் வெள்ள அபாய கட்டம் தற்போதைக்கு இல்லை.

பேச்சிப்பாறை நீர்மட்டம் 41.40 அடியாக உள்ள நிலையில் அணைக்கு விநாடிக்கு 529 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 232 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைப்போல் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.68 அடியாக உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 304 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றாறு ஒன்றில் 14.76 அடி தண்ணீர் உள்ள நிலையில் 161 கனஅடி உள்வரத்தாக வருகிறது. 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர் மழையால் குமரி மாவட்டத்தில் குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை, திருவட்டாறு, கீரிப்பாறை, சிற்றாறு உட்பட மலையோர பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் தொழில் முடங்கியுள்ளது. பால் வெட்டும் தொழிலாளர்கள், தோட்ட தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாகவே வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இதைப்போன்றே தேங்காய் வெட்டுதல் உட்பட தென்னை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமான தொழில், செங்கல்சூளை தொழில், மீன்பிடி தொழில் உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

குமரி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் இருள்சூழ்ந்த நிலையில் மிதமான மழை பெய்ததால் பகலை இரவாக்கும் வகையில் தட்பவெப்பம் நிலவியது. மோட்டார் சைக்கிள், கார், மற்றும் பிற வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு பயணித்தனர். நாகர்கோவில் வடசேரி, மற்றும் பிற பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் மழைக்கு மத்தியில் நடைபெற்றன. இதனால் நாகர்கோவில் உட்பட பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x