Published : 15 Nov 2022 04:45 AM
Last Updated : 15 Nov 2022 04:45 AM

திருப்பத்தூரில் கனமழை - 43 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அச்சமங்கலம் ஏரி

திருப்பத்தூர் அடுத்த அச்சமங்கலம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதை பூக்கள் தூவி வரவேற்ற கிராமமக்கள்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த மேல் அச்சமங்கலம் ஏரி தொடர் மழை காரணமாக 43 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதையடுத்து, கிராம மக்கள் கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து மழை நீரை வழிபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை தொடர்ந்து கொட்டி வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலம் மழைநீரால் மூழ்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. அங்குள்ள குடி யிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.

வாணியம்பாடி சி.எல்.சாலை, நேதாஜி சாலைகள் தொடர் மழையால் சேறும், சகதியுமாக மாறியுள்ளன. ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் அனைத்து சாலைகளிலும் மழைநீர் குட்டைப்போல் தேங்கி நிற்கிறது. ஜலகம்பாறை நீர்வீழச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு வதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. ஆண்டியப்பனூர் அணையும் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில், ஜோலார் பேட்டை அடுத்த மேல் அச்ச மங்கலத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரி தொடர் மழை காரணமாக 43 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதையறிந்த கிராமமக்கள் மழைநீரை வரவேற்க அங்கு குவிந்தனர். 43 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய ஏரி நிரம்பியதை வரவேற்கும் விதமாக கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து மழைநீரை வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x