Published : 14 Nov 2022 12:24 PM
Last Updated : 14 Nov 2022 12:24 PM
மயிலாடுதுறை: "நெற்பயிர் இழப்பீடு குறித்து எதிர்க்கட்சிகள் கேவலப்படுத்துவதற்காக, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக ஏதேதோ கூறுவர். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ற வகையில் பயிர்சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை வெளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், விளை நிலங்களையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழி புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடந்த நிகழ்வில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், பாதிக்கப்பட்ட மக்கள் வைத்த கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நீங்கள் நினைப்பதைப் போல எதிர்ப்பையோ, கண்டனத்தையோ மக்கள் தெரிவிக்கவில்லை. பெரிய ஏமாற்றத்துடன் நீங்கள் வந்திருப்பதாக நான் அறிகிறேன்.
எனவே மக்கள் மிகுந்த திருப்தியுடன் உள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டிலேயே மயிலாடுதுறை, சீர்காழி போன்ற பகுதிகளில்தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் இந்தப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனடியாக நேற்று முன்தினமே, செந்தில்பாலாஜி, மெய்யநாதன், ரகுபதி உள்ளிட்ட 3 அமைச்சர்களையும், இங்குள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் அனுப்பிவைத்து நிவராணப் பணிகளை மேற்கொள்ள வைத்தேன். மாவட்ட ஆட்சியரும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
இந்தப்பணிகள் மட்டும் போதாது நானும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், நேற்று இரவோடு இரவாக பாண்டிச்சேரி வந்து தங்கி, காலை முதல் ஆய்வு செய்துள்ளேன். மேற்கொள்ளப்பட்ட உள்ள பணிகள் அனைத்து திருப்தியாக உள்ளது. எனவே மக்கள் திருப்பதியாகத்தான் உள்ளனர். அவர்களுக்கு இன்னும் சில குறைகள் உள்ளன. அவைகளும் இன்னும் 5, 6 நாட்களுக்குள் தீர்த்துவைக்கப்படும்.
நெற்பயிர் இழப்பீடு குறித்து எதிர்க்கட்சிகள் கேவலப்படுத்துவதற்காக, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக ஏதேதோ கூறுவர். அதுகுறித்து நான் கவலைப்படவில்ல. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ற வகையில் விளை நிலங்கள் பயிர்சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக இன்று காலை கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள், விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், கீழ்பவானிகுப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT