Published : 12 Nov 2022 03:09 PM
Last Updated : 12 Nov 2022 03:09 PM

மழை பாதிப்பை கணக்கிட அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்கள் குழுவை அனுப்புங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: “மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்புகளை கணக்கிடுவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை அனுப்ப வேண்டும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கும், பிற பிரிவினருக்கும் உடனடியாக போதிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் உழவர்கள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையால் கடலூர் மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் இந்த மழையால் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீர்காழியில் 44 செ.மீ மழை பெய்துள்ளது. கொள்ளிடத்தில் 32 செ.மீ மழையும், அருகிலுள்ள கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் நகரில் 31 செ.மீ மழையும் பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் பெய்த மழையால் பயிர்களுக்கு மட்டும் தான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இப்போது பெய்து வரும் மழை அனைத்து தரப்பினரையும் இழப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை - வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் பயிர்கள் அழுகிவிட்டன. சூறைக்காற்றில் படகுகள் மோதி சேதமடைந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் மற்றும் வணிகம் தடைபட்டிருப்பதால் அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

சீர்காழி பகுதியில் உப்பனாற்றில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் தங்களின் உடமைகளை இழந்துள்ளனர். மழை நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களில் பெரும்பாலானவை கடந்த 25 நாட்களில் நடவு செய்யப்பட்டவை. ஏற்கனவே கடந்த வாரம் பெய்த மழையிலும் அப்பயிர்கள் மூழ்கி இருந்தன என்பதால் அவற்றை இனி காப்பாற்ற முடியாது என்றும், அவற்றில் பெரும்பாலான பயிர்கள் அழுகத் தொடங்கி விட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அழுகிய நெற்பயிர்களை அகற்றி விட்டு புதிதாக நாற்று நடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று உழவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏக்கருக்கு ரூ.20,000 வரை செலவாகும் என்பதால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

பெரும்பாலான பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் மழை - வெள்ளத்தில் மூழ்கியதற்கு காரணம் வடிகால்கள் தூர்வாரப்படாதது தான் காரணம் என்று உழவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாற்றை மறுக்க முடியாது. வடிகால்கள் சரி செய்யப்படாவிட்டால் அடுத்தடுத்து பெய்யும் மழைகளிலும் நெற்பயிர்கள் சேதமடையக் கூடும். அதனால், காவிரி டெல்டாவில் வடிகால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர் மழையால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு அரசுத் தரப்பில் வாழ்வாதார உதவிகளும், நிவாரணமும் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும். அதேபோல், சம்பா நெற்பயிர்கள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட உழவர்களின் துயரத்தை துடைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப் பட்டால் தான் விவசாயிகளின் நெருக்கடி ஓரளவாவது குறையும்.

இதைக் கருத்தில் கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்புகளை கணக்கிடுவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை அனுப்ப வேண்டும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கும், பிற பிரிவினருக்கும் உடனடியாக போதிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x