Published : 12 Nov 2022 03:04 PM
Last Updated : 12 Nov 2022 03:04 PM
சென்னை: "மழையின் வெள்ளச் சேதத்தின் உண்மையான நிலையை சொல்லாமல் மாறி, மாறி பேசக்கூடிய தலைவர்கள் தான் தற்போது திமுகவில் இருக்கிறார்கள். இனியும் இந்த அரசை நம்பினால் மக்கள் மிகப்பெரிய அவல நிலைக்கு ஆளாவார்கள்" என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை குறித்த காலத்தில் தொடங்கியது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்தவாறு கடந்த 10.11.2022 முதல் தமிழகமெங்கும் 36 மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை 16.11.2022 வரை நீடிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, அவர்களது அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் பால், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள், அத்தியாவசிய, அவசர உதவிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை இந்த திமுக அரசு போதிய அளவு செய்யவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள்.
வட கிழக்கு பருவமழை எந்த தேதியில், எந்த நேரத்தில் தொடங்கும் என்று மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் பல தினங்களுக்கு முன்பாக அறிவித்திருந்த போதிலும்,
அதை கவனத்தில் கொள்ளாத மக்கள் விரோத திமுக அரசு, எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்ததன் விளைவாக, இன்று பல்வேறு மாவட்டங்களில், பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து, வெள்ளம் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, சென்னை மாநகரை பொறுத்தவரையில் மழை நீர் வடிகால் பணிகள் எந்த அளவிற்கு நடந்து முடிந்திருக்கிறது என்பதை அறுதியிட்டு கூற முடியாத ஆட்சியாளர்கள் தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள். குறிப்பாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் 90 விழுக்காடு பணிகள் நிறைவடைந்தது என்றும், சுகாதாரத் துறை அமைச்சர் 70 விழுக்காடு பணிகள் நிறைவடைந்திருக்கிறது என்றும், சென்னை மாநகர மேயர் 75 விழுக்காடு பணிகள் நிறைவடைந்திருக்கிறது என்றும், தமிழகத்தின் முதல்வர் 70 முதல் 80 விழுக்காடு பணிகள் நிறைவடைந்திருக்கிறது என்றும் ஒருவருக்கொருவர் கூறுவதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
ஆட்சி அதிகாரத்தில், நிர்வாகத்தில் எந்தவிதமான கருத்து பரிமாற்றங்களோ, தகவல் பரிமாற்றங்களோ இல்லை என்பதன் வெளிப்பாடுதான் இப்படி முரண்பட்ட கருத்துக்களை ஆட்சியாளர்கள் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இருக்கும்போது இவர்களுடைய மக்கள் நலப்பணி எந்த அளவிற்கு இருக்கும் என்பதை மக்களுடைய பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
இது போன்ற பேரிடர் காலங்களில் களமாடக் கூடிய முதலவர் இல்லை என்கின்ற மக்களின் எண்ண வெளிப்பாடு பெரும்பகுதியாக வெளிப்படுகிறது. காரணம் கடந்த ஒக்கி புயலின் போதும், கஜா புயலின் போதும். சுனாமியின் பெரும் தாக்கத்தின் போதும், 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய மழை வெள்ளத்தின் போதும் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து களத்தில் இறங்கி களமாடிய இயக்கம் அதிமுக.
மாறாக, கடந்த சில தினங்களாக ஆட்சியாளர்கள் ஒரு சில இடங்களை மட்டும் மேம்போக்காக பார்வையிட்டுவிட்டு மற்ற பகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்கவில்லை. எனவே, இந்த அரசு மழை நீரை வடியாத அரசாக மாற்றியிருக்கிறது. மாரி என்று சொல்லக்கூடிய மழையின் வெள்ளச் சேதத்தின் உண்மையான நிலையை சொல்லாமல் மாறி, மாறி பேசக்கூடிய தலைவர்கள்தான் தற்போது திமுகவில் இருக்கிறார்கள். இனியும் இந்த அரசை நம்பினால் மக்கள் மிகப்பெரிய அவல நிலைக்கு ஆளாவார்கள். அவர்களுடைய வாழ்க்கை மோசமான நிலைக்கு தள்ளப்படும்.
மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின், வழிவந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களுடைய பகுதிகளில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களுக்கு உழைப்பதில் அதிமுக உடன்பிறப்புகளே முன்கள வீரர்கள்; தன்னலம் கருதாத தியாகச் செம்மல்கள் என்ற வீர வரலாறு நம் பொதுவாழ்வுக்கு உண்டு. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம். ``பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம்; வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும்போதும் இன்பம்’’ என்ற பாடல் நம் பணிகளுக்கு உந்து சக்தியாக இருக்கட்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT