Published : 11 Nov 2022 01:21 PM
Last Updated : 11 Nov 2022 01:21 PM

வானிலை முன்னெச்சரிக்கை: தமிழகத்தில் பரவலாக கனமழை; கடலூர், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை வாய்ப்பு

இடம்: சென்னை | படம்: ஆர்.ரகு

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். அதேநேரத்தில், தமிழகத்தில் பரவலாக கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சற்று வலுப் பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது தொடர்ந்து வட மேற்கு திசை நோக்கி நகரும். பின்னர் தமிழகம், கேரளா பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்லும். கடந்த 24 மணிக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 21 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்" என்று அவர் தெரிவித்தார். அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:

11ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

12ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

14 மற்றும் 15ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சுறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x