Published : 08 Nov 2022 07:45 AM
Last Updated : 08 Nov 2022 07:45 AM
என்.கணேஷ்ராஜ், எம்.நாகராஜன், க.சக்திவேல்
குமுளி/ உடுமலை /கோவை: கேரள அரசு தன்னிச்சையாக இரு மாநில எல்லைகளை டிஜிட்டல் ரீ-சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டுஉள்ளது. இதனால் எல்லையோர தமிழக நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரள அரசு மாநிலம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் டிஜிட்டல் ரீ-சர்வே செய்து வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றம், நில வரையறை, இடங்களை வகைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இப்பணிகளை மேற்கொள்வதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதில் 1,500 சர்வேயர்கள், 3,200 உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியை 4 ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மறு அளவீடு செய்ய வேண்டுமானால், முதலில் தமிழக-கேரள எல்லையை அளவிட வேண்டும். அப்போதுதான் மறு அளவீடு முழுமைபெறும். இதைச் செய்யாமல் வருவாய் நிலங்களை கேரள அரசு மறு அளவீடு செய்வதன் மூலம் தமிழகம் ஆயிரம் முதல் 1,400 சதுர கிலோ மீட்டர் வன, தோட்டப் பகுதிகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். கேரளா உருவானபோது எல்லை வரையறையை சரியாகச் செய்யாததால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை அருகில் உள்ள தமிழக வனப் பகுதிகள் 1956-ம் ஆண்டு முதலே அங்குள்ளவர்களால் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்பு அங்கிருந்த வன நிலங்கள் வருவாய் நிலங்களாக, பட்டா மாற்றம் பெற்று கேரள நிலங்களாக மாறிவிட்டன.
இதுபோன்ற குளறுபடிகளால் தமிழக சர்வே துறையில் தமிழக வன நிலமாகக் குறிக்கப்பட்டிருக்கும் ஓர் இடம், கேரள வருவாய்த் துறையால் பட்டா நிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று எல்லைப் பகுதி நிலங்களில் குளறுபடிகள் அதிகளவில் உள்ளன. இதுகுறித்து பெரியாறு,வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை அருகே உள்ள சாந்தம்பாறை, சின்னக்கானல், பைசன் வேலி, ராஜாக் காடு, சதுரங்கப்பாறை ஆகிய இடங்களில் இருக்கும் தமிழக நிலங்களுக்கு கேரள அரசு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.
குமுளியில் உள்ள கேரள சோதனைச் சாவடி மாதா சிலை அருகில் இருந்தது. படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு கேரள பேருந்து நிலையம் அருகே வந்துவிட்டது. இதேபோல் முல்லைக்கொடி, ஆனவச்சால் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளை இழந்துவிட்டோம் என்றார். வழக்கறிஞரும், அரசியல்வாதியுமான கேஎஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையேயான மொத்த எல்லை 830 கி.மீ. இதில் 203 கி.மீ. எல்லை மட்டுமே இரு மாநிலங்களாலும் வரையறுக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 627 கி.மீ. எல்லை இதுவரை அறுதியிடப்படவில்லை. இதற்கு கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாததுதான் காரணம். வரையறை செய்யப்படாத இடங்கள் பெரும்பாலும் மலைப்பகுதி என்பதால் ஆக்கிரமிப்பின் மூலம் தமிழக நிலப்பகுதி கேரள பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றன.
உதாரணமாக தேனி மாவட்டம் கூடலூர் அருகே கண்ணகி கோட்டம், தென்காசி மாவட்டம் செண்பகவல்லி அணை, செங்கோட்டை அருகே அடவிநயினார் அணை ஆகியவை தமிழகத்தில் அமைந்துள்ளன. ஆனால் நீர்வரத்து போன்றவற்றை ஆக்கிரமித்து கேரளா ஆளுமை செலுத்தி வருகிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் களியக்காவிளை தாலுகாவைச் சேர்ந்த ஒரு கிராமத்துக்கு ரேஷன் கார்டு வழங்கியதுடன் அங்கே நிலவரியும் வசூலிக்க முயன்றது. அதை நான் சுட்டிக்காட்டியதும் முன்னாள் முதல்வர் கருணாநிதி இதை தடுத்து நிறுத்தினார்.
இதேபோல் கோவை அருகே அட்டப்பாடி தாலுகாவில் உள்ள 22 மலை கிராமங்களில் இருந்தும் தமிழர்களை வெளியேற்றியது. தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் ஏற்கெனவே சுமார் 16 வகையான நதி நீர் பிரச்சினைகள் உள்ளன. தற்போது இந்த தன்னிச்சையான போக்கை தடுத்து நிறுத்தாவிட்டால் மீண்டும் இதுபோன்ற அவலங்களை எல்லையோர தமிழர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். ஆகவே தமிழக வருவாய், வனத் துறை அதிகாரிகள் இப்பணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் மற்றும் பெரியாறு, வைகை அணை பாசன சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவருமான எம்.ஈசன் இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறியதாவது:
இதுதொடர்பாக தமிழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு தொடர்ந்து மவுனமாக இருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றார். ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து கூறும்போது, “வாளையாறு அணை, எல்லையோர மலைப்பகுதிகளில் மறுஅளவீடு செய்யும்போது பிரச்சினை எழ வாய்ப்பு உள்ளது. பழைய பதிவுகளை வைத்து எல்லையை சரிபார்க்க வேண்டும்" என்றார். கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவை மாவட்ட எல்லையோரம் இதுவரை எந்த மறுஅளவீடு பணிகளும் தொடங்கவில்லை. இதுதொடர்பாக எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. கோவை மாவட்ட வன எல்லைகள் சரியாக அளவிடப்பட்டுள்ளன. 20 மீட்டர் இடைவெளிவிட்டு அவை வரையறுக்கப்பட்டுள்ளன. எல்லைகளுக்கான வரைபடம், ஆவணங்கள் ஆகியவை நம்மிடம் உள்ளன. அதைமீறி தமிழக பகுதிக்கு யாரும் உரிமைகோர முடியாது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT