Published : 07 Nov 2022 06:47 AM
Last Updated : 07 Nov 2022 06:47 AM
சென்னை: புதிய வந்தே பாரத் ரயிலை தயாரித்து முடித்துள்ள ஐசிஎஃப் நிர்வாகம், அதை தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைத்தது. சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே இந்த ரயிலை வரும் 11-ம் தேதிமுதல் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. நாட்டில் தற்போது அதிநவீன வசதிகளுடன் கூடிய 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், 5-வது வந்தே பாரத் ரயில் சேவையை மைசூரு - சென்னை சென்ட்ரல் இடையே நவ.11-ம் தேதி தொடங்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) இந்த ரயிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்த ரயிலை தயாரித்து, நவ.6-ம் தேதி ஒப்படைக்கப்படும் என்று ஐசிஎஃப் தெரிவித்தது. அறிவித்தபடி, 5-வது வந்தே பாரத் ரயிலை தயாரித்து, தெற்கு ரயில்வேயிடம் ஐசிஎஃப் நேற்று ஒப்படைத்தது.
இன்று சோதனை ஓட்டம்: 16 பெட்டிகள் கொண்ட இந்தரயில், ஐசிஎஃப்பில் இருந்து நேற்றுகாலை புறப்பட்டு, பேசின்பாலம் பணிமனையை அடைந்தது. பிறகு, சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் தெற்கு ரயில்வேபொது மேலாளர் பி.ஜி.மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த ரயில் இன்றுகாலை 5.50 மணிக்கு புறப்படுகிறது. இந்த பயணத்தின்போது, ரயிலின்வேகம் அதிகரித்து சோதிக்கப்படும்.
சோதனை ஓட்டம் முடிந்த பிறகு, கர்நாடக மாநிலம் மைசூரு - சென்னை சென்ட்ரல் இடையே புதன்கிழமை தவிர, வாரத்தில் மற்ற 6 நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (20607), காலை 10.25 மணிக்கு பெங்களூரு செல்லும். அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு மைசூருவை சென்றடையும். மைசூருவில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும்வந்தே பாரத் ரயில் (20608), பெங்களூருவுக்கு பிற்பகல் 2.55 மணிக்கு வரும். அங்கிருந்து புறப்பட்டு, இரவு 7.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். சென்னை - மைசூரு இடையிலான 504 கி.மீ. தூரத்தை 6 மணி நேரம் 40 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT