Published : 03 Nov 2022 02:43 PM
Last Updated : 03 Nov 2022 02:43 PM
சென்னை: வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து மைசூருவிற்கு மணிக்கு 75 கி.மீ வேகத்தில் 6 மணி 40 நிமிடத்தில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-ல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த வகையான ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டன.
இதன் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை - காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் 5-வது சேவை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த சேவை வரும் நவம்பர் 10-ம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயிலில் கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் சதாப்தி ரயிலை விட 20 நிமிடம் மட்டுமே முன்னதாக மைசூரு சென்றடைகிறது வந்தே பாரத் ரயில்.
வந்தே பாரத் ரயில்
சதாப்தி
சதாப்தி ரயில் சென்னையில் இருந்து மைசூரு செல்ல 7 மணி நேரம் 15 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து மைசூரு செல்ல 6 மணி நேரம் 40 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. வந்தே பாரத் ரயிலை மணிக்கு 180 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும். ஆனால் தற்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில் அதிகாரிகளிடம் கேட்ட போது, சென்னை - ஜோலார் பேட்டை இடையிலான வழித்தடத்தில் அதிகபட்ச வேகத்தில் ரயில்களை இயக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணிகள் நிறைவு பெற்றவுடன் வேகம் அதிகரிக்கபட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT