Published : 03 Nov 2022 04:25 AM
Last Updated : 03 Nov 2022 04:25 AM
வேலூர்/திருவண்ணாமலை: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை வரை நீடித்தது. தொடர்ந்து மழை நீடிக்கும் என்ற நிலையில் வேலூர் மற்றும் தி.மலைமாவட்டங்களில் உள்ள பள்ளி களுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப் பட்டது. வானம் மேக மூட்டத்துடன் மிதமான மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ள அம்முண்டி பகுதியில் 25.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குடியாத்தத்தில் 13, காட்பாடியில் 9, மேல் ஆலத்தூரில் 11.80, பொன்னையில் 16.20, வேலூரில் 12.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக வந்தவாசியில் 69.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
பாலாறு நீர்வரத்து: தமிழக எல்லையில் ஆந்திர மாநில பகுதியில் கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கவுன்டன்யா ஆற்றில் இருந்து 250 கன அடியும், மண்ணாற்றில் இருந்து 10, கல்லாற்றில் இருந்து 10, மலட்டாற்றில் இருந்து 75, அகரம் ஆற்றில் இருந்து 10, பள்ளிகொண்டா பேயாற்றில் இருந்து 10 கன அடி வீதம் பாலாற்றுக்கு நீர்வரத்து ஏற்பட் டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 11 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மோர்தானா நீர்த்தேக்க அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு 250 கன அடிக்கு நீர்வரத்து இருப்பதால் உபரி நீராக கவுன்டன்யா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT