Published : 02 Nov 2022 09:29 PM Last Updated : 02 Nov 2022 09:29 PM
36 மணி நேரத்தில் 30 செ.மீ மழை - வட சென்னை கள நிலவரம் என்ன?
சென்னை: சென்னையில் விட்டுவிட்டு பெய்துவரும் கனமழை காரணமாக வட சென்னையின் ஒரு சில இடங்களில் 2-வது நாளாக புதன்கிழமை தண்ணீர் தேங்கியது.
தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதியில் தண்ணீர் வடிந்து விட்ட நிலையில், கொளத்தூர், வில்லிவாக்கம் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் 2-வது நாளாக சென்னையில் பெய்து வரும் கனமழையின் பாதிப்பு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்:
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா பகுதியில் 17 செ.மீ, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 16 செ.மீ, சோழிங்கநல்லூர், அயனாவரம், அம்பத்தூர், எம்ஜிஆர் நகர், நுங்கம்பாக்கத்தில் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வட சென்னையில் 36 மணி நேரத்தில் 30 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய 90 சதவீத மழை அளவை 2 நாட்களில் பெற்றுள்ளது வட சென்னை.
கனமழை காரணமாக கொளத்தூர் வெற்றி நகர், மந்தவெளி பேருந்து நிலையம், வில்லிவாக்கம் ஜனநாதன் தெரு, பெரம்பூர் பிபி சாலை, பட்டாளம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மாலை நிலவரப்படி ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மீதம் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத் சீராக உள்ளது.
அஷ்டபுஜம் ரோடு, பாந்தியன் லேன், மெட்டுக்குளம் சந்திப்பு, அசோக் நகர் 4, 7 மற்றும் 11 வது அவென்யூ, பிடி ராஜன் சாலை, இளைய தெரு, இ.எச்.ரோடு வி.என்.எம். பிரிட்ஜ் வெஸ்டர்ன் மவுத் ஆகிய சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்லும் நிலை உள்ளது.
சென்னை மழை காரணமாக விழுந்த 19 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 65 இடங்களில் மேட்டார் பும்புகள் உதவியுடன் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
சென்னை வடபழனி 100 அடி சாலையில் ரெடிமேட் முறையில் ஒரே இரவில் மழைநீர் கால்வாய் கட்டமைப்பை நெடுஞசாலைத்துறை அதிகாரிகள் அமைத்தனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தாண்டு தண்ணீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சிக்கு ரயில்வே கோட்ட மேலாளர் நன்றி தெரிவித்தார்.
சென்னையில் பருவமழை பணிகள் தொடர்பான அனைத்துத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், மழை நீர் தேங்கிய இடங்களில் தண்ணீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
WRITE A COMMENT