Published : 02 Nov 2022 09:05 AM
Last Updated : 02 Nov 2022 09:05 AM

‘மழைக்காலங்களில் இடி, மின்னலின்போது டிவி, கணினி, செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்’

கோவை: இடி, மின்னலின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் போன்ற மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கோவை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சுதா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இடி அல்லது மின்னலின்போது உடனடியாக கான்கிரீட் கூரையாலான பெரிய கட்டிடம், வீடு அல்லது பேருந்து, வேன், கார் போன்றவற்றில் தஞ்சமடைய வேண்டும். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சமடையக் கூடாது.

திறந்த நிலையில் உள்ள ஜன்னல்கள், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது. இடி இடிக்கும்போது கண்டிப்பாக டிவி-க்கு வரும் கேபிள் தொடர்பை துண்டித்துவிட வேண்டும். மின்மாற்றியில் ஃபியூஸ் போயிருப்பின் அதனை சரி செய்ய மின் ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும். மழைக் காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகளின் இழுவை கம்பிகள் அருகே செல்ல வேண்டாம்.

வீட்டில் உள்ள மின் சாதனத்தில் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனே வீட்டிலுள்ள மெயின் சுவிட்ச்சை உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து சென்று அணைத்துவிட்டு, உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் போன்ற மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஈரமான கைகளால் சுவிட்சை தொட வேண்டாம். மழை பெய்யும்போது கேபிள் வயர்களை தொடக்கூடாது. மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x