Published : 26 Oct 2022 10:31 AM
Last Updated : 26 Oct 2022 10:31 AM

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்: கோவை மாநகர் முழுவதும் குப்பை தேக்கம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள். (அடுத்த படம்) போராட்டத்தால் மாநகரில் அகற்றப்படாமல் தேங்கியுள்ள குப்பை.

கோவை

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர் முழுவதும் குப்பை தேங்கியுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சுமார் 6,500-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. தினமும் சுமார் 800 முதல் 1000 டன் வரை குப்பை சேகரம் ஆகிறது. இவ்வாறு சேகரமாகும் குப்பை வெள்ளலூர் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் குப்பை தேங்கியது. பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 4-ம் தேதி முதல் மீண்டும் பணிக்கு சென்றனர். ஆனால், பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

இதனை அடுத்து நேற்று முதல் மீண்டும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர். அதன்படி நேற்று போராட்டம் தொடங்கியது. இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறிதாவது:

பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று மாமன்ற கூட்டத்தில் எந்த அறிவிப்பும், தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் 3 ஆயிரம் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மட்டுமல்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.நான்கு ஆண்டுகளாக போராடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.721, பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.529, நகராட்சியில் ரூ.606, ஊராட்சியில் ரூ.529 என ஊதிய உயர்வு அறிவித்தார்.

பேரூராட்சி, நகராட்சிகளில் இந்த கூலி வழங்கப்பட்ட நிலையில், மாநகராட்சியில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கான அரசாணை வெளியிட்ட பிறகும்கூட தற்போது வரை வழங்கவில்லை. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x