Published : 24 Oct 2022 06:48 AM
Last Updated : 24 Oct 2022 06:48 AM

மழைநீர் வடிகால் பணிகளின்போது தடுப்புகள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்: தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை பர்னபி சாலையில் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று பார்வையிட்டார். உடன் துறை செயலாளர்கள் சிவ் தாஸ் மீனா, பிரதீப் யாதவ், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள்.

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின்போது பள்ளம் தோண்டும் இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள்அமைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மழை காலங்களில் பெருவெள்ளம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் வழக்கமான நாளான அக்.20-ம் தேதியை இலக்காக கொண்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இப்பணிகள் 20-ம் தேதியை தாண்டியும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜாபர்கான்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால்பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்த தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவர்உயிரிழந்தார்.

இதனிடையே தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று அண்ணாநகர், அடையார், ராயபுரம் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அப்பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை அதிகாரிகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, பருவமழை தொடங்குவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதை இரு துறைகளும் உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வடிகால் அமைக்கப்பட்ட இடங்களில் வடிகால் மற்றும் சாலை ஆகியவற்றுக்கு இடையே மேடு, பள்ளங்கள் இல்லாதவாறு சரி செய்ய வேண்டும். அதிக அளவில் மழைநீர் வழிந்தோட தூர் பள்ளங்களை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரதீப் யாதவ், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x