Published : 23 Oct 2022 04:10 AM
Last Updated : 23 Oct 2022 04:10 AM
மாநில அரசுகள் தொலைக்காட்சி சேவை வழங்க மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதனால், தமிழக அரசு நடத்தி வரும் கல்வித் தொலைக் காட்சிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய தொலைதொடர்பு கண்காணிப்பு நிறுவனமான ‘ட்ராய்’ (இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) கடந்த 2012-ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கிய அறிவுறுத்தலில், ‘மத்திய, மாநிலஅரசுகள், அவற்றின் நிறுவனங்கள் தனியாருடன் இணைந்து ஒளிபரப்பு தொழிலை மேற்கொள்ளக் கூடாது’என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது ஆந்திரா, கேரளா,தமிழகம் போன்ற மாநில அரசுகள்கல்வி நோக்கத்துக்காக தொலைக்காட்சி சேனல்களை தொடங்கி நடத்தி வருகின்றன. இதுபோன்று மாநில அரசுகள் நடத்தும் தொலைக்காட்சிகளில் மத்திய அரசுக்கு பாதகமான தகவல் இடம்பெறுவதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற சேனல்களில் வெளியாகும் வீடியோக்களை கண்காணிப்புக்கு உட்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதனால், ட்ராய் நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு வழங்கிய அறிவுறுத்தலை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கவனமாக பரிசீலித்து வந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 21-ம்தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மத்திய அமைச்சகங்கள், மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுத் துறைகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளை வழங்க கூடாது. அப்படி ஒளிபரப்ப விரும்பினால் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிரச்சார் பாரதி மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும். அதற்கான பணிகளை அடுத்த ஆண்டுடிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்கவேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், கற்றலை இனிமையாக்கி இடைநிற்றலை தடுக்கும் வகையில் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் ஒளிபரப்பாகும் காட்சிகள் அனைத்தும் அரசுமற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்படுபவை. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதுபற்றி தமிழக கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மத்திய அரசின் சுற்றறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும், அதில்உள்ள வழிகாட்டுதல்களை பார்த்தபிறகுதான், அது கல்வி தொலைக்காட்சியை பாதிக்குமா, விலக்கு கோர வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து தெரியவரும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT