Published : 19 Oct 2022 07:07 AM
Last Updated : 19 Oct 2022 07:07 AM
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை சென்னை கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில்குமரேசன் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.
இதை மீறுபவர்களை ரயில்வே சட்டப்பிரிவு 164-ன்கீழ் கைது செய்து, ரூ.1,000 அபராதம் அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ், ரயில்வே பாதுகாப்புப் படை சென்னை கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில்குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் ரயில்வே பாதுகாப்புப் படை சென்னை கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில்குமரேசன் கூறியதாவது: ரயில் போக்குவரத்தை அதிக மக்கள் தினசரி பயன்படுத்துகின்றனர். எனவே, ரயில் பயணிகளின் பாதுகாப்பு மிக அவசியமாகிறது. எனவே, பயணிகள் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது, நடைமேடையில் கால்களை உரசிச் செல்வது, கூரைமீது பயணம் செய்வது, கல்லூரி மாணவர்கள் இடையே மோதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT