Last Updated : 19 Oct, 2022 04:35 AM

 

Published : 19 Oct 2022 04:35 AM
Last Updated : 19 Oct 2022 04:35 AM

கடந்த ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை 856-ல் வெறும் 7 கிராமங்களுக்கு மட்டுமே இழப்பீடு: தஞ்சை விவசாயிகள் அதிர்ச்சி

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 856 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்த நிலையில்,வெறும் 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டும் சொற்ப அளவிலான இழப்பீட்டுத் தொகை வழங்க காப்பீடு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

எனவே, இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

2021-22 ராபி பருவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 856 கிராமங்களைச் சேர்ந்த 1,33,884 விவசாயிகள் 3,50,212 ஏக்கர் நெல் சாகுபடிசெய்த நிலத்துக்கு ரூ.17.94 கோடிபயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் சம்பா நெல் அறுவடை நேரத்தில் பெய்த கனமழை காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்தியக்குழுவினர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய இழப்பீடை பெற்றுத் தருவோம் என ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில், பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ரூ.480.59 கோடி தமிழகம் முழுவதும் உள்ளவிவசாயிகளுக்கு வழங்கப்படும் என கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வெறும் ரூ.36 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில்,தஞ்சாவூர் வட்டாரம் இனாத்துகான்பட்டியில் 330 விவசாயிகளுக்கு ரூ.3.88 லட்சம், பூதலூர் வட்டாரம் மேகளத்தூரில் 469 விவசாயிகளுக்கு ரூ.1.08 லட்சம், கும்பகோணம் வட்டாரம் இன்னம்பூரில் 783 விவசாயிகளுக்கு ரூ.10.90 லட்சம், கல்லூரில் 837 விவசாயிகளுக்கு ரூ.11.53 லட்சம், பாபநாசம் வட்டாரம் சூலமங்கலம் 1-ம் சேத்தியில் 441 விவசாயிகளுக்கு ரூ.5.01 லட்சம்,

திருவையாறு வட்டாரம் ஆச்சனூரில் 15 விவசாயிகளுக்கு ரூ.38,402, திருவிடைமருதூர் வட்டாரம் எஸ்.புதூரில் 447 விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் என 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே சொற்பமான இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 856 கிராமங்களில் 849 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதில், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டாரங்களில் ஒரு கிராமம் கூடஇடம்பெறவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பட்டுக்கோட்டை வட்டம் பொன்னவராயன்கோட்டை விவசாயி வா.வீரசேனன் கூறியது: கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு பிப்ரவரி மாதமே இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மட்டுமே ரூ.17.94 கோடி பிரீமியம் செலுத்திய நிலையில், அவர்களுக்கான இழப்பீடு வெறும் ரூ.36 லட்சம் என்பது எந்த அடிப்படையில் எனத் தெரியவில்லை. அதேபோல, மாவட்டத்தில் 856 கிராமங்களில் வெறும் 7 கிராமங்களுக்கு மட்டுமே இழப்பீடு என்பது மற்ற கிராம விவசாயிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

இழப்பீடு பட்டியலில் ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டாரங்களில் ஒரு கிராமம் கூட இடம்பெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x