Published : 17 Oct 2022 04:35 AM
Last Updated : 17 Oct 2022 04:35 AM

காவரியில் வெள்ளப்பெருக்கு: குமாரபாளையம் தாலுகாவில் 5 முகாம்களில் 600 பேர் தங்க வைப்பு

குமாரபாளையத்தில் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அருகில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் கவுசல்யா.

நாமக்கல்/ஈரோடு

குமாரபாளையத்தில், காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையில் அமைந்துள்ள இந்திரா நகர், கலைமகள் வீதி, மணிமேகலை வீதி ஆகிய பகுதி மக்கள் நகராட்சி திருமண மண்டபம், புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்முகாம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வுசெய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘குமாரபாளையம் தாலுகாவில் பாதிக்கப்பட்ட 222 குடும்பங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் ஐந்துநிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகள், மருத்துவ சேவை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன’ என்றார். திருச்செங்கோடு கோட்டாட்சியர் கவுசல்யா, வட்டாட்சியர் தமிழரசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பவானி, கொடுமுடியில் வெள்ளம்: பவானி புதிய பேருந்து நிலையம், கந்தன் நகர், காவிரி நகர், பாலக்கரை, நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இங்கு வசித்து வந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள், அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பவானி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். பவானி கூடுதுறைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு, கரையோரம் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில்உள்ள கோயில் மற்றும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கொடுமுடியில் இழுப்பு தோப்பு, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

அங்கு வசித்தவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஈரோடு- பள்ளிபாளையத்தை இணைக்கும் காவிரி பழையபாலத்தைத் தொட்டபடி நீர் செல்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x