Published : 12 Oct 2022 06:52 AM
Last Updated : 12 Oct 2022 06:52 AM

மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகளால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி காவல் துறை ஆலோசனை

சென்னை: சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணி மற்றும் மழைநீர் வடிகால் பணி உள்ளிட்டபல்வேறு குடிமராமத்து பணிகளால் வாகனங்கள் செல்லும் வழிகள் குறுகிவிட்டன. இதனால், வாகன நெரிசல் ஏற்படுவதோடு செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் நெடுஞ்சாலைத் துறை செயலர் பிரதீப் யாதவ், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், சென்னை போக்குவரத்து அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு சில முடிவுகளும் எடுக்கப்பட்டன. அதன் விவரம்: சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையிலிருந்து பெறப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளைச் செய்வதற்கான அனுமதிகளை சென்னை பெருநகர காவல் துறையினர் விரைந்துஅளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடைபெற்று வரும்அனைத்து பணிகளிலும், எவையெல்லாம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பணிகள் எனப்பட்டியலிட்டு சென்னை மாநகராட்சிக்கும் நெடுஞ்சாலைத் துறையினருக்கும் வழங்கி அப்பணிகளை விரைந்து முடிக்கச் செய்யப்படும்.

பணிகள் நிறைவடைந்தவுடன் முன்பு இருந்த தரமான நிலைக்குச்சாலையைக் கொண்டு வரச்சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை இரு துறைகளுக்கும் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைநீர் வடிகால் விடுபட்ட இணைப்பு தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க, முன்னுரிமை அளிக்கப்படும். இனிமேல் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையில் முறையான மற்றும் விரைவான அனுமதியை உறுதிசெய்வதற்காகச் சாலைகளின் குறுக்கே மற்றும் நெடுக்கே வெட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு ஒற்றைச் சாளர அமைப்புநடைமுறைப்படுத்தப்படும்.

இரவில் மழைநீர் வடிகால் பணிகள் செய்யும் இடங்களில், தேவையான அறிவிப்புகள் மற்றும் தடுப்புகள் அமைத்து சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் புதிய வாட்ஸ்-அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகளைவிரைந்து முடிக்க வசதியாக, சம்பந்தப்பட்ட துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட ரெடி மிக்ஸ் கான்கிரீட் கலவை வாகனங்களைப் பகல் நேரங்களிலும் நெரிசல் இல்லாத நேரங்களில் நகரச் சாலைகளில் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படும். அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x