Published : 11 Oct 2022 04:45 AM
Last Updated : 11 Oct 2022 04:45 AM
100 நாள் வேலைத் திட்டத்தில் முறையான பணி, ஊதியம் வழங்காவிட்டால் மத்திய அரசு மற்றும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாலபாரதி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில், கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முற்றுகை மற்றும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கடவூர் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியை உடனே தொடங்க வேண்டும்.
இப்பணியை விவசாயப் பணியுடன் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலபாரதி தலைமை வகித்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட 20 ஊராட்சிகளில் 100 நாள் வேலை நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 100 நாள் வேலைத் திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை முறையாக தராமல், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநில அரசை குறை கூறுகிறார். ஆனால், நூறு நாள் தொழிலாளர்களுக்கு வேலை ஒதுக்கவும், ஊதியம் அளிக்கவும் மத்திய அரசு மறுக்கிறது.
100 நாள் வேலை பணியாளர்களுக்கு முறையான வேலை, ஊதியம் வழங்காவிட்டால், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அன்புமணி, பாலபாரதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆட்சியரிடம் பேசி முறையாக பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததையடுத்து, 2 மணி நேர காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT