Published : 06 Oct 2022 06:41 PM
Last Updated : 06 Oct 2022 06:41 PM
சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க மாநகராட்சி மேயர் பிரியா அளித்த கால அவகாசம் இன்னும் நான்கு நாட்களில் முடிய உள்ள நிலையில், சென்னையில் 80 சதவீதம் மட்டுமே மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை வரும் நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, "வருகின்ற 10-ம் தேதிக்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் இறையன்பு விரைவாக கால்வாய்களை தூர் வாரும் பணிகளையும் முடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது 1000 கிலோ மீட்டர் வரை தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. வருகின்ற 7-ம் தேதிக்கு முன்பாக அந்தப் பணிகளையும் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு பணிகளும் விரைவாக செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதன்படி மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க மாநகராட்சி மேயர் பிரியா அளித்த கால அவகாசம் இன்னும் 4 நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு நிறைவடைந்து என்று மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், "சென்னையில் சிங்காரச் சென்னை திட்டத்தில் 2 கட்டம், வெள்ள நிவாரண நிதி, உட்கட்டமைப்பு வசதிகள் நிதி, உலக வங்கி நிதி என்று 5 திட்டங்கள் மொத்தம் 167.34 கி.மீ நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 142.86 கி.மீ நீளத்திற்கு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதன்படி 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த இடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது" என்றனர்.
இதைத் தவிர்த்து மின் மேட்டார்கள் வைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னையில் அதிக கனமழையால், வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க ஒவ்வொரு சுரங்கப்பாதைகளிலும் தலா இரண்டு மின் மோட்டார்கள், தாழ்வான இடங்கள், குடிசைவாழ் பகுதிகள் உள்ளிட்ட இடங்கள் என மொத்தம் 700 இடங்களில் மின் மோட்டார்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது ஒரு சில இடங்களில் இந்த மின் மேட்டார்கள் வைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மின்சார வாரியம், பொது பணித்துறை, காவல் துறை, குடிநீர் வாரியம், மாநகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் விபரம், மொபைல் போன் எண்கள் அடங்கிய செயலியை மாநகராட்சி துவக்கி உள்ளது. இந்த மொபைல் செயலி வாயிலாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் அலுவலக பயன்பாட்டிற்காக மட்டுமே இந்தச் செயலி துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாகவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதன்படி சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் முழுமையான நிறைவடையாது என்பதுதான் அனைவரின் கருத்ததாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT