Published : 06 Oct 2022 07:00 AM
Last Updated : 06 Oct 2022 07:00 AM
சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றுமுதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் வட மாநிலங்களில் ஆக்ரா, குவாலியர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவக் காற்று விலகத் தொடங்கியது. வரும் 20-ம் தேதிக்குள் முழுமையாக விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவக் காற்று வலு குறைவதால், தமிழகத்தில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவும், வட தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றுமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல 8, 9 தேதிகளில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 6-ம் தேதி சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதனால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT