Published : 04 Oct 2022 03:55 PM
Last Updated : 04 Oct 2022 03:55 PM

சென்னையில் இந்தாண்டு மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை: அமைச்சர் எ.வ.வேலு 

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்யும் அமைச்சர்கள் ஏ.வ.வேலு , சேகர் பாபு

சென்னை: சென்னையில் இந்தாண்டு மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகளையும், சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளையும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, "சென்னை மாநகராட்சியில் மாநகராட்சி சார்பாகவும், நீர்வளத்துறை மற்றம் நெடுஞ்சாலைத் துறை மூலமாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 6, 7, 8 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை முதல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் 15 ம் தேதிக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

சென்னையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் 90 சதவிகித பணிகள் நிறைவடைந்திருந்தாலும் 10 சதவிகித பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் விபத்தை தடுக்கும் வகையில் முழுமையாக பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளேன். மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும். இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால் செப்பனிடுவதாக இருந்தாலும், கழிவுநீர் வடிகால் சீர் செய்வதாக இருந்தாலும் 3 துறைகளும் சேர்ந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. முதற்கட்டமாக கூவம் நிதியில் உள்ள கசடுகளை அகற்றுவதன் மூலம் நீர்வழிப் பாதை சீர் செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலம் முடிந்த உடன் கூவம் நதி சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு லண்டன் தேம்ஸ் நதிக்கு இணையாக சென்னை கூவம் நதி மாற்றப்படும். சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x