Published : 03 Oct 2022 02:31 PM
Last Updated : 03 Oct 2022 02:31 PM

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் | மேயர் பிரியா கூறியது என்ன?

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எத்தனை சதவீதம் நடைபெற்றுள்ளது என்று மாநகராட்சி மேயர் பிரியா பேட்டி அளித்துள்ளார்.

சென்னையில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் மற்றும் வெள்ள தடுப்புப் பணிகள் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ராயபுரம் மண்டல அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, " சென்னை மாநகராட்சியில் முக்கிய பணியாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற 15 ஆம் தேதிக்கு பின் மழைக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ய திட்டமிட்டு கூட்டம் நடத்தப்பட உள்ளன. அதில் முதல் கட்டமாக துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி பொறுத்தவரை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் முதல் கட்டம் , கட்டம் 2 என இரண்டு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அதிகமாக மழை நீர் தேங்கிய இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் முதல் கட்ட திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்த முதல் கட்டத்தில் 95% பணிகளும் ,இரண்டாவது கட்டத்தில் 85 % சதவீத பணிகளும் தற்போது வரை நடைபெற்று முடிந்துள்ளன. மேலும், வெள்ள நிவாரண நிதியில் நடைபெறும் பணிகள் 65%, உட்கட்டமைப்பு வசதிகள் நிதியில் நடைபெரும் பணிகள் 88% உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் பணிகள் 86% முடிந்துள்ளது.

வருகின்ற 10ம் தேதிக்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு விரைவாக கால்வாய்களை தூர் வாரும் பணிகளையும் முடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது 1000 கிலோ மீட்டர் வரை தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. வருகின்ற 7ம் தேதிக்கு முன்பாக அந்தப் பணிகளையும் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு பணிகளும் விரைவாக செய்யப்பட்டுள்ளது.

மழை அதிகமாக பெய்யும் பட்சத்தில் நிலைமையை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் மழை நீர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது." இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x