Published : 02 Oct 2022 04:35 AM
Last Updated : 02 Oct 2022 04:35 AM

கோவையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 260 உணவு வணிகர்களுக்கு ரூ.5.20 லட்சம் அபராதம்

கோவை

கோவையில் கடந்த 5 மாதங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 260 உணவு வணிகர்களுக்கு ரூ.5.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடப்பாண்டு இரண்டாவது காலாண்டுக்கான மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது ஆட்சியர் கூறியதாவது: அனைத்துக் கல்லூரிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் உள்ள கேன்டீன், விடுதி சமையல் கூடங்களுக்கு உரிமம், பதிவுச் சான்றிதழ் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும். கேன்டீன், விடுதி சமையல் கூடம் உண்ண உகந்த வளாகம் என்ற சான்றிதழ் பெற வேண்டும்.

அங்கன்வாடி மையம், மதிய உணவு மையத்துக்கு பெறப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை பதிவுச்சான்று உரிய காலத்தில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

ஆதிதிராவிடர் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் இயங்கும் சமையல் கூடங்கள், கேன்டீன்கள், அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் குடோன்களும் உணவுப் பாதுகாப்பு துறை மூலம் உரிமமும், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு பயிற்சியும் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 260 உணவு வணிகர்களுக்கு ரூ.5.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தரம் குறைவான உணவு, கலப்பட டீத்தூள், கலப்பட எண்ணெய், அளவுக்கு அதிகமான செயற்கை வண்ணம் கலந்த உணவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கு.தமிழ்செல்வன், அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பேக்கரி சங்க நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x