Published : 08 Jun 2014 03:09 PM
Last Updated : 08 Jun 2014 03:09 PM

காவிரி மேலாண்மை வாரியம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கருணாநிதி வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் உடனடியாக அனைத்துக் கட்சிகளையும் உடனடியாக அழைத்து கருத்துகளைக் கேட்பது அவசியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இன்றையதினம் நாளேடுகளில் வந்துள்ள செய்திகளில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியிடம் பேசியதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் யோசனை எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும், ஆதாரம் இல்லாமல் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தற்போது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறியதோடு, இது குறித்து பிரதமர் மோடியை வரும் 10ஆம் தேதியன்று கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு ஒன்று நேரில் சந்தித்து முறையிடவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக மாநில அரசு இந்தப் பிரச்சினைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்துக் கட்சிகளையும் கொண்ட குழுவினை பிரதமரைச் சந்திக்க அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது.

ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் இது போன்ற பிரச்சினைகளுக்காக ஜனநாயக ரீதியாக அனைத்துக் கட்சிகளை அழைத்து யோசனை கேட்பதோ, பிரதமரிடம் முறையிடுவதோ என்பதெல்லாம் கிடையாது. குறைந்த பட்சம் அவர்களுடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றாவது முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தாரா என்றால் அதுவும் கிடையாது.

குறுவைச் சாகுபடி இந்த ஆண்டும் தொடர்ந்து கேள்விக் குறியாகி விட்ட நிலையில் முதல்–அமைச்சர் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உடனடியாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் என்பதை இனிமேலாவது ஜெயலலிதா உணருவாரா?

என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x