Published : 09 Sep 2022 06:34 AM
Last Updated : 09 Sep 2022 06:34 AM
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே தினமும் 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனினும், காலை, மாலை நேரங்களில் ரயில்களில் கூட்டம் நிரம்பிவழிகிறது.
எனவே, கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென ரயில் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்ட 3-வது புதிய பாதையில் கடந்த மே மாதம் ரயில் சேவை தொடங்கினாலும், கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை.
இதனால், வண்டலூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் இருந்து பயணம் செய்பவர்கள் தாம்பரம் வந்து, மற்ற மின்சார ரயில்கள் மூலம் சென்னைக்குச் செல்கின்றனர். இதனால், அவர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே, தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஓரிரு மாதங்களில் கூடுதல் புறநகர் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வேகம் அதிகரிப்பு
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்ட 3-வது பாதையில் மின்சார ரயில்களும், எப்போதாவது விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த புதிய பாதையில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது, மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது.
இந்தப் பாதையில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டதன் மூலமாக, அதிக ரயில்களை இயக்க முடியும். அப்போது, இந்தப் பாதையில் நெரிசலும் குறையும்.
கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் எதிர்காலத்தில் கூடுதல் புறநகர் ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது பாதை ரூ.598கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் ரயில் சேவையை கடந்த மே மாதம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தப் பாதையில் தினமும் சுமார்20 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தப் பாதையில் மின்சார ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT