Published : 18 Jun 2014 08:16 AM
Last Updated : 18 Jun 2014 08:16 AM

மாற்று இதயம் பொருத்தப்பட்ட பெண் பேசத் தொடங்கினார்: திரவ உணவு வழங்கப்பட்டது

மாற்று இதயம் பொருத்தப்பட்ட மும்பை பெண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேசத் தொடங்கினார். அவருக்கு வாய் வழியாக திரவ உணவு கொடுக்கப்படுகிறது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

மும்பையை சேர்ந்தவர் கேப்டன் அஸ்பி பி மினோசேர்ஹோதி. கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அர்மைடி. இவர்களின் மகள் அவோவி (21). பி.காம். பட்டதாரியான இவர், இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். மாற்று இதயத்துக்காக காத்திருந்த அவோவி, சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதனின் இதயம் அவோவிக்கு திங்கள்கிழமை இரவு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு அவோவி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:

அவோவிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம், செவ்வாய்க்கிழமை காலையில் அகற்றப்பட்டது. இப்போது அந்த பெண் பேசத் தொடங்கிவிட்டார். தற்போது அவருக்கு வாய் வழியாக திரவ உணவு கொடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x