Published : 02 Sep 2022 09:15 AM
Last Updated : 02 Sep 2022 09:15 AM
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான சுமார் ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் முதல் நேற்று பிற்பகல் வரை தொடர்ந்து மழை பெய்ததால், 4 மாவட்டங்களிலும் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த தொடர் மழையால், தஞ்சாவூர் மாவட்டத்தில் மெலட்டூர், கொத்தட்டை, அன்னத்தோட்டம், புலவர்நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள், சாய்ந்தும், மழைநீரில் மூழ்கியும் சேதம் அடைந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்தால், வயல்களில் சாய்ந்துள்ள நெற்கதிர்களில் உள்ள மணிகள் முளைவிட தொடங்கிவிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு ஒரு லட்சத்து 88 ஆயிரம்கன அடி தண்ணீர் செல்லும் நிலையில், ஆச்சனூர், மருவூர், வடுககுடி உள்ளிட்ட கொள்ளிடம் கரையோர கிராமங்களில் 200 ஏக்கர் வாழைப் பயிர்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால், வேர் அழுகி வாழைப் பயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே, நெல்லைபோல, வாழைக்கும் பயிர்க் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட வாழைப்பயிர்களை தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் தவிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை கிராமத்தில் சுமார் 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இங்கு கடந்த 20 தினங்களுக்கு முன்பு சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகள், நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும்முன்பாகவே,
கொள்முதல் நிலையத்தை அதிகாரிகள் மூடிவிட்டனர். இதனால் கடந்த ஒருவாரமாக நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் வைத்துக்கொண்டு விவசாயிகள் இரவு, பகலாக காவல் காத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT