Published : 02 Sep 2022 04:15 AM
Last Updated : 02 Sep 2022 04:15 AM

கனமழை, வெள்ள பாதிப்பை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் - பொதுமக்கள் ஒத்துழைப்பு தர அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரை 40 செமீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 88 சதவீதம் அதிகம். கடந்த 24 மணி நேரத்தில் 36 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் 12.7 செமீ மழை பதிவாகியுள்ளது. மழைக்கு இதுவரை 2 குழந்தைகள் உட்பட 9 பேர் இறந்துள்ளனர். 9 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 4,597 பேர், 31 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், செப்.4-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேட்டூர், பவானி அணை நீர்மட்டம்

இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம், அணையின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், செப்.1-ம் தேதி காலை 11.30 மணி அளவில் மேட்டூர் அணையிலிருந்து 55,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

பவானி அணையிலிருந்து 9,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து, முதல்வரின் அறிவுறுத்தல் பேரில், கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க, காவிரி ஆற்றுப்படுகை மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு, தொடர்புடைய கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, 17.69 லட்சம் செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் கண்காணிப்பு

மீட்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட, ஈரோடு, நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு, மாவட்டத்துக்கு ஒரு குழு வீதம், 75 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்களும், திருச்சிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 80 வீரர்களைக் கொண்ட ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளது. பேரிடர் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க மாநில அவசரக் கட்டுப்பாட்டுமையம், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை 24 மணிநேரமும் கூடுதல் அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

மேலும், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்த வெள்ளம்காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x