Published : 02 Sep 2022 04:35 AM
Last Updated : 02 Sep 2022 04:35 AM

செப்.11-ல் இமானுவேல் சேகரன் நினைவு நாள்: அஞ்சலி செலுத்த வாடகை, திறந்த வேன்களில் வர தடை

ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் | கோப்புப் படம்

ராமநாதபுரம்

இமானுவேல் சேகரன் நினை விடத்தில் அஞ்சலி செலுத்த வரும் 11-ம் தேதி பரமக்குடி வருபவர்கள் வாடகை, திறந்த வேன்களில் வர அனுமதியில்லை என ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இமானுவேல் சேகரன் நினைவு தினம் பரமக்குடியில் வரும் 11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆலோசனை நடத்தினார். பின் னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து அஞ்சலி செலுத்த வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். வாடகை மற்றும் திறந்த வெளி வேன், சரக்கு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், டிராக் டர், சரக்கு ஆட்டோக்கள், சைக் கிள் ஆகியவற்றில் வர அனுமதி யில்லை.

சொந்த வாகனங்களில் வருபவர்கள் வாகன எண், வாகனப் பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோர் விவரங்களை வரும் 8-ம் தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட டிஎஸ்பி அலுவலகங்களில் அளித்து வாகன அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இதை வாகனத்தில் முன்புறக் கண்ணாடியில் ஒட்ட வேண்டும்.

சொந்த வாகனங்களில் வரு பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்துக்கு வந்து செல்ல வேண்டும். வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்வது, ஆயுதங்கள் எடுத்துச் செல்வது, வரும் வழியில் பட்டாசு வெடிப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் ஒலி பெருக்கிகள், சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஆகியவற்றை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க அனுமதி இல்லை. ஜோதி தொடர்பான உபகரணங்களை பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது. பேருந்துகளில் படிக்கட்டு, மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. அனைவரும் முறையாக பயணச்சீட்டு பெற்று வர வேண்டும். அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் வரும்போது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

அஞ்சலி செலுத்துவதற்கான நேரம் கேட்டு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 8-ம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். ஜோதி, முளைப்பாரி, பால்குடம் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. நினைவிடத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x