Published : 01 Sep 2022 07:00 PM
Last Updated : 01 Sep 2022 07:00 PM
மேட்டூர்: கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை அதிகளவு பெய்து வந்த நிலையில், தற்போது மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிய தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை கடந்த ஜூலை 16-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நீடித்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் மொத்த நீரையும், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை 8 மணிக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று பகல் விநாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து சரிந்துள்ளது.
இதையடுத்து, அணையின் 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 62 ஆயிரம் கன அடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி என மொத்தம் விநாடிக்கு 85 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 400 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாக உள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை: அணையில் இருந்து விநாடிக்கு 85 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நீர் வளத்துறை சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்க, துணி துவைக்க, செல்ஃபி எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பு: சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் இரண்டு நாட்களாக தண்ணீர் சென்றதால் கன ரக வாகன போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நேற்று மூன்றாவது நாளாக கன ரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மேட்டூர் கரையோர பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்திருந்தது. தற்போது, அணைக்கு நீர் வரத்து குறைந்து வருவதால், வீடுகளில் சூழ்ந்த வெள்ள நீர் படிபடியாக வடிந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால், அதற்கு தகுந்த வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தயாராக நீர் வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு துறை, வருவாய் துறை, காவல் துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT